articles

img

ஆளும் வர்க்கச் சதிகளை அறுத்தெறிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்போம்.... சிஐடியு மே தின அறைகூவல்....

உலகம் முழுதும் இருக்கின்ற தொழிலாளர் வர்க்கத்திற்கும் மற்றும் நலிவடைந்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கின்ற உலகப் பொருளாதாரத்தை மீண்டும் இயங்கச் செய்வதற்கான கடும் முயற்சிகளில் ஈடுபட்டு, பெரிய அளவில் இழப்புகளைச் சுமந்து, மற்ற மக்களின் உயிர்களைக் காப்பாற்றிய உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்தியத்  தொழிற்சங்க மையம் (சிஐடியு) வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.கோவிட் 19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ள பல லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தன் இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

உலகம் முழுவதும் ஒரு பக்கத்தில் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராகவும், மறுபக்கத்தில் ஆளும் வர்க்கங்களும் ஆட்சியில் உள்ள அவர்களின் முகவர்களும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள், உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள்மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு எதிராகவும் வீரத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் தன் சகோதர ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.சமூகம் - அறிவியல் – தொழில்நுட்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வளர்ந்திருந்தபோதிலும், 2019ஆம் ஆண்டின் இறுதியில் தலைதூக்கிய கொரோனா பெருந்தொற்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஏற்படுத்திவரும் இன்னல்கள், முதலாளித்துவ அமைப்பு முறையின் கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான முகத்தையும் நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. அவர்களின் உயிர்களைப் பாதுகாத்திட முடியவில்லை. முதலாளித்துவ அமைப்பானது குடிமக்களுக்கு சுகாதாரத்தை ஓர் அடிப்படை உரிமையாக அளிக்கக்கூடிய அமைப்பு அல்ல, மாறாக அது சுகாதாரத்தை பணம் படைத்தவர்களுக்கான ஒன்றாக ஒதுக்கியிருக்கக்கூடிய அமைப்பு என்பதை மிகவும் கொடூரமான முறையில் காட்டிக்கொண்டிருக்கிறது. சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, உணவு ஆகிய அனைத்தும் ஏழைகளுக்குக் கிட்டாது விலகிச் சென்றுகொண்டிருப்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகி இருக்கிறது. பல லட்சக்கணக்கானவர்கள் வேலைஇழந்திருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய பணக்காரநாடாகவும், மிகவும் வல்லமை படைத்த நாடாகவும் விளங்கும்அமெரிக்கா மற்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுடன் இணைந்து, பொது சுகாதாரப் பாதுகாப்பை எந்த அளவிற்கு சீரழித்திருக்கிறது என்பதற்கும், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் கொழுக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்பல்லாயிரக்கணக்கானவர்கள் இறப்பதற்கு இட்டுச் சென்றது என்பதற்கும் மிகவும்  மோசமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இன்றைய தினம் இந்தியாவும் இவர்களின் குழுமத்தில் இணைந்திருக்கிறது. 

சோசலிசமே மாற்று
கோவிட் தடுப்பூசிகள் முன்னேறிய ஒருசில நாடுகளின்கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. தடுப்பூசிகளைப் பெறுவதற்கு ஏழை நாடுகள் பல மறுக்கப்பட்டு வருகின்றன.கோவிட்-19 பெருந்தொற்றின் அனுபவம் மீண்டும் ஒருமுறை சோசலிச அமைப்பின் உன்னதத்தன்மையை உயர்த்திப்பிடித்திருக்கிறது. இது, மூலதனத்தைக் காட்டிலும் மக்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறது. சோசலிசநாடுகளில் அனைவருக்குமான பொது சுகாதாரப் பாதுகாப்பின் மூலமாகவும், உரிய நேரத்தில் அரசின் தலையீட்டின் காரணமாகவும் கோவிட் 19 கொரோனா வைரஸ்பெருந்தொற்றுப் பரவுவது வலுவானமுறையில் கட்டுப்படுத்தப்பட்டு, இதன் காரணமாக ஏற்படும் சாவுகளும் குறைக்கப்பட்டன. சீனா, வியட்நாம், வட கொரியா ஆகிய நாடுகள் இந்த நோயை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கும் மக்களுக்கு சுகாதார வசதிகளையும், வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பது எப்படி என்பதற்கும் உலகின் பிற நாடுகளுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன.  சீனாவும் வியட்நாமும் தங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை மீண்டும் சரியான நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

மேலும் சீனா, 98.99 மில்லியன் (9 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரம்) கிராமப்புற மக்களை வறுமையின் பிடியிலிருந்து உயர்த்தியதன் மூலம் 2021 பிப்ரவரியில் வறுமையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, ‘முழுமையான வெற்றியை’ அடைந்திருக்கிறது. இவ்வாறு அது, ஐக்கியநாடுகள் மன்றம் 2030ஆம் ஆண்டிற்குள் வறுமையைஒழிக்க வேண்டும் என்று வகுத்துத் தந்துள்ள நிகழ்ச்சிநிரலை பத்து ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்டது.  மேலும்கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2030 வாக்கில்மேலும் பலர் அதீத வறுமைக்கு ஆளாவார்கள் என்றும் உலக அளவில் 207 மில்லியனைத் (20 கோடியே 70 லட்சத்தைத்) தாண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மதிப்பிட்டுள்ள நிலையில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

நோபல் பரிசு வழங்குக!
அமெரிக்க ஏகாதிபத்தியம், கியூபாவிற்கு மனிதாபிமானமற்ற முறையில் பொருளாதாரத் தடை மற்றும் முற்றுகை விதித்திருந்தபோதிலும், கியூபா, கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக, உலகம் முழுதும் 51 நாடுகளுக்கும் மேலாக தன் நாட்டின் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களை அனுப்பி, ஆதரவு நடவடிக்கைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்திருக்கிறது. இவ்வாறு கியூபா ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளுக்கு மட்டுமல்ல, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. சுயநலமின்றி, உலகம் முழுவதும் சென்று மருத்துவ சேவைகள் ஆற்றிவந்துள்ள கியூப மருத்துவர்களுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சிஐடியு கோருகிறது.
முன்னேறிய முதலாளித்துவ நாடுகள், தாங்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை இதர நாட்டு மக்களுக்கு அனுப்பிவைக்கத் தயாராக இல்லாத அதே சமயத்தில்,மக்கள் சீனம் கோவிட் தடுப்பூசிகளை 53 நாடுகளுக்குஅனுப்பி வைத்திருக்கிறது, தொடர்ந்து அனுப்பிக்கொண்டுமிருக்கிறது. கியூபாவும்கூட, ஈரான், வெனிசுலா மற்றும் தேவைப்படும் இதர நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும், சர்வதேச நிதி மூலதனமும் கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டும் மக்களைப் பல்வேறு விதங்களில் தாக்கிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், சோசலிச நாடுகள் சோசலிச அமைப்பு முறையை உயர்த்திப் பிடித்திடவும், பாதுகாத்திடவும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதற்காக சிஐடியு அந்நாட்டின் மக்களுக்குத் தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. மே தினமான இன்று, சோசலிச நாடுகளுடனான ஒருமைப்பாட்டை சிஐடியு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. 

உலகத்தைத் தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக, குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகள், பாலஸ்தீனம், மத்தியக் கிழக்கு மற்றும் ஆசிய- பசிபிக்பிராந்திய நாடுகளைக் குறிவைத்தும் தன் மிருகத்தனமான நடவடிக்கைகளை ஏகாதிபத்தியம் அதிகரித்துக் கொண்டிருப்பதை சிஐடியு கவலையுடன் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறது. வளர்முக நாடுகளைப் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடக்கியாள்வதற்குத் தேவையான நிர்ப்பந்த நடவடிக்கைகளை அது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்தியஉதாரணம், அமெரிக்காவின் ஏழாவது கடற்படைக் கப்பல்கள், லட்சத்தீவுகளுக்கு அருகே இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு உரிய கடற்பகுதிகளுக்குள் இந்தியாவின் அனுமதியின்றி நுழைந்திருப்பதாகும்.  இதுஇந்திய இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். ஏகாதிபத்திய மிருகத்தனத்தை சிஐடியு கண்டிக்கிறது. அமெரிக்காவின் மிருகத்தனத்திற்கு எதிராக பாஜக அரசாங்கம் தன் வலுவான எதிர்ப்பினைப் பதிவு செய்ய வேண்டும் என்று சிஐடியு கோருகிறது.

பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்களுக்கு, குறிப்பாகத்தங்கள் நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடுகளுக்கு எதிராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைப் பாதுகாப்பதற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களுக்கு, சிஐடியு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.வெனிசுலாவில் ஜனநாயகப் பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வெனிசுலா மக்களுக்குத் தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.தங்கள் தாயகத்தின் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு சிஐடியு தனதுஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது. பாலஸ்தீனப் பகுதிக்குள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் தன்னுடைய செட்டில்மெண்ட்டுகளை விரிவாக்கிக் கொண்டே செல்வதையும் வன்மையாகக் கண்டிக்கிறது. 1967இல் இருந்த எல்லைகளுடன் தாய்நாடு வேண்டும் என்றும், கிழக்கு ஜெருசலத்தைத் தங்கள் தலைநகராக ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரும் பாலஸ்தீனியர்களின் கோரிக்கைகளையும் ஆதரிக்கிறது.மியான்மரில் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவச் சதிக்கு எதிராகவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மீது  ராணுவத்தினரால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள தாக்குதல்களை சிஐடியு கண்டிக்கிறது.

பாஜக அரசுக்கு கண்டனம்
மத்திய பாஜக அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைப் பயன்படுத்திக் கொண்டு, சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களுக்கும், அவர்கள் உயிர்வாழ்வதற்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய விதத்திலும், “முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பு கிடைத்திருப்பதாகக்” கருதி நவீன தாராளமய நிகழ்ச்சிநிரலை மிகவும் மிருகத்தனமாகப் பின்பற்றி, தங்களுடைய நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ வர்க்கத்தினர் கொள்ளை லாபம்ஈட்டுவதற்கு வகை செய்து கொடுத்திருப்பதற்கு சிஐடியு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.இந்தக் காலத்தில்தான் பாஜக அரசாங்கம், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்று கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியது. நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இல்லாதிருந்த சமயத்தில் நான்குதொழிலாளர் (விரோத) சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்திடும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. ‘சுய சார்பு’ இந்தியா என்று மக்களை ஏமாற்றக்கூடிய விதத்தில் கூறிக்கொண்டே, பாஜக அரசாங்கம் ஒட்டுமொத்த நாட்டையும், அதன்செல்வாதாரங்களையும், பொதுத்துறை நிறுவனங்களையும் அதேபோன்று நாட்டில் உண்மையாகவே செல்வத்தைஉருவாக்கிடும் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கு அடகு வைத்திடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. இவற்றின்மூலமாக நாட்டையும் நாட்டு மக்களையும் 19ஆவது நூற்றாண்டில் காலனிய ஆட்சியாளர்களின் சுரண்டலில் நாடு இருந்த நிலைமைகளுக்குத் திரும்பவும் தள்ளக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.

மாநில அரசுகளின் மீது  பழி போடுவதா?
நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ், நாட்டில்பொதுத்துறையின்கீழ் மிகப் பெரிய அளவில் செயல்பட்டுவந்த தடுப்பூசி நிறுவனங்கள் மூன்றையும் மூடிவிட்டது.அதற்குப் பதிலாக தடுப்பூசி உற்பத்தியை தனியார் கம்பெனிகளிடம் ஒப்படைத்திருக்கிறது. இவர்களிடமிருந்து தடுப்பூசி வாங்குபவர்களில் இந்திய அரசும் ஒன்றாகும். ஒரு காலத்தில் தடுப்பூசி உற்பத்தியில் முன்னோடியாக இருந்த இந்தியா, இன்றைய தினம் கோவிட் தடுப்பூசிகள் பற்றாக்குறையால் மிகவும் மோசமான முறையில்பரிதவித்துக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்கி, அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பதற்கு இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று  பல மாநில அரசாங்கங்களும், இந்திய மருத்துவக் கழகமும்  கோரி வருவதை மறுத்திருக்கிறது. மாறாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது மாநில அரசாங்கங்கள் மீது பழி போடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்.ஓராண்டுக்கு முன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தாருடன் பல்லாண்டு காலம் தாங்கள் வேலை பார்த்துவந்த முதலாளிகள், தங்களை வேலையிலிருந்து நீக்கி, பசி-பட்டினியுடன் விரட்டியடித்ததற்கு எதிராக, அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதத்தில் வீதிகளில் நடந்து சென்றநெஞ்சைப் பிளக்கும் படங்களை நாடு பத்திரிகைகளில் பார்த்தது. 1979ஆம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம் ஓரளவுக்குபுலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருசில பாதுகாப்புகளை அளித்து வந்தது. ஆனால் அவை இப்போது புதிய சட்டங்களின்கீழ் நீக்கப்பட்டுவிட்டன.இப்போது கொண்டுவரப்பட்டிருக்கிற, புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான வரைவு தேசியக் கொள்கையில் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் அல்லது அவர்களுக்கும் தொழில் உறவுகளுக்கும் இடையேயுள்ள விஷயங்கள் குறித்து எதுவுமே இல்லை. இப்புதிய வரைவில்அவர்கள் ‘வாக்களிப்பதற்கான ஏற்பாடு’ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.இது அவர்களின் வாக்குகள் மீது குறி வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கிற வஞ்சகமான ஓர் ஏற்பாடே தவிர வேறொன்றுமில்லை.    

அச்சுறுத்தும் இரண்டாவது அலை

இப்போது கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக நாடுமுழுதும் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், மீண்டும்ஊரடங்குகள் வந்து தங்கள் வாழ்வைச் சூறையாடிவிடுமோ என்ற பயம் அவர்களின் முகத்தில் தென்படத் தொடங்கிவிட்டது. இதன்விளைவாக கோடிக்கணக்கான புலம்பெயர்தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை மீண்டும் நொறுங்கி வீழ்ந்துவிடுமோ என்ற பயத்துடன் காணப்படுகிறார்கள். மீண்டும் ஊரடங்குகள் வந்துவிடும் என்ற பயத்துடன் இப்போதே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும்தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் (விரோத) சட்டங்கள், பாஜக அரசாங்கத்தால் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பெரும் கொடைகளாகும். ‘வர்த்தகத்தை எளிமைப்படுத்துகிறோம்’ என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டங்கள் மூலம் அவர்கள் தொழிலாளர்களை எவ்விதமான தடங்கலுமின்றிச் சுரண்டலாம்.ஒரு பக்கத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்கள், இதுநாள்வரையிலும் முதலாளிகள் சட்டவிரோதமாக மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சட்டப்பூர்வமாக்கிவிட்டன. மறுபக்கத்தில் தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், தொழிலாளர்உரிமைகளுக்காகவும் ஒன்றுபட்டுப் போராடும் தொழிலாளர்களின் நடவடிக்கைகளை கிரிமினல் குற்றமாக்கி இருக்கின்றன. மே தினத்துடன் பின்னிப்பிணைந்த, உலகம் ஒப்புக்கொண்டுள்ள, “எட்டுமணி நேரவேலை” என்பது கூட இச்சட்டப்பிரிவுகளின் மூலம் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டங்கள் அனைத்துமே தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அமைக்கும் உரிமையையும், கூட்டுப்பேர உரிமையையும் ஒழித்துக்கட்டுவதற்கானவையேயாகும்.   இப்புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ளுவதற்காகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றன, அவர்கள் இதுநாளும் போராடிப் பெற்ற  உரிமைகள் அனைத்தையும் பறித்துக்கொண்டிருக்கின்றன, முரட்டுத்தனமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முதலாளித்துவச் சுரண்டலுக்குஎதிராக தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட விடாமல்அவர்களைப் பலவீனப்படுத்தி, நசுக்கிட வேண்டுமென்கிற குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

நாட்டின் சொத்துக்களாக விளங்கும் பொதுத்துறைநிறுவனங்கள் அனைத்தும் பாஜக-வின் கூட்டுக்களவாணிகார்ப்பரேட்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இக்காலகட்டத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளையும், வருமானங்களையும் இழந்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தார் பட்டினிக்கொடுமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதம் என சுருங்கி இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் கவுதம் அதானியின் சொத்து மட்டும் இரட்டிப்பாகி இருக்கிறது. உலகப் பணக்காரர்கள் வரிசையில் 20 இடங்கள் ஏறி, உலகின் 48ஆவதுபணக்காரராகவும், இந்தியாவின் இரண்டாவது பணக்காரராகவும் உயர்ந்திருக்கிறார்.  முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் 24 சதவீதம்உயர்ந்திருக்கிறது. அவர், உலகின் எட்டாவது பணக்காரராகமாறி இருக்கிறார். இந்திய பில்லியனர்களின் சொத்துமதிப்புகொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் 35 சதவீதம் அதிகரித்திருப்பதாக ஆக்ஸ்ஃபாம்  அமைப்பு  கூறுகிறது.  

கார்ப்பரேட்டுகளுக்கு காவு கொடுப்பதா?
இந்த நிலைமைகள் அனைத்தும் ஆட்சியாளர்கள், மக்களைக் காவு கொடுத்து, அந்நிய மற்றும் இந்தியக்கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக நாட்டின் வளங்களை, கருவூலத்தை மற்றும் நிதி அமைப்புமுறையை சூறையாடுவதற்கு வசதி செய்து தரும் நோக்கத்துடன் காட்டுமிராண்டித்தனமாகக் கொள்கைகளைப் பின்பற்றிவருவதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.ஒட்டுமொத்தத்தில், உலகம் முழுதும் உள்ள கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் இக்கால கட்டத்தில் தங்கள் சொத்துக்களைப் பல்கிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன. அதே சமயத்தில் உலகத்தின் மொத்தஉள்நாட்டு உற்பத்தி எதிர்மறையாகத் திரும்பி இருக்கிறது.  இந்தியா உட்பட பல நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. நாசகரமான நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளினால் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.நம் நாட்டில் சாமானிய மக்கள் தங்கள் சேமிப்புகளைப்போட்டுவைத்திருக்கும் பொதுத்துறை வங்கிகள், பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. ராணுவ உற்பத்தி, ரயில்வே, தொலைத்தொடர்பு,  சிவில் விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், மின்சாரம், உருக்கு, கனிமச் சுரங்கங்கள் முதலானவையும் அந்நிய ஏகபோக முதலாளிகள் உட்பட தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன.சுகாதாரம், கல்வி, மக்கள் நலத் திட்டங்கள் போன்றசேவைகள் உட்பட ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளும் தனியாரிடம் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் நாட்டின் வேலைவாய்ப்பில் கடுமையான முறையில் எதிர்மறை மற்றும் நாசகர விளைவுகளை ஏற்படுத்திடும். நம் உற்பத்தித் திறன்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (‘Make in India’)  என்ற முழக்கத்துடன் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதுதான்.‘நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன், மற்றவர்களையும் ஊழலில் ஈடுபட அனுமதிக்க மாட்டேன்’ என்று பிரதமர் கூறியவை இப்போது பிரெஞ்சு ஊடகங்கள், ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் இடைத்தரகர்களுக்கு கையூட்டுவழங்கப்பட்டிருக்கிறது என்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ள நிலையில் சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகமேசம்பந்தப்பட்டிருக்கறது.

மோடி அரசாங்கம் இவ்வாறு தொழிற்சாலைகளையும் அவற்றுடன் இணைந்த சேவைகளையும் மட்டுமல்ல, நாட்டின் வேளாண்மையையும் கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு அகலத் திறந்துவிட்டிருக்கிறது. நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் நம் விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்கு வசதி செய்து கொடுப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவைகளேயாகும். நம் நாட்டில்இதுநாள்வரையிலும் விவசாயம் என்பது சிறிய விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவர்கள் அதனை கார்ப்பரேட் விவசாயமாக மாற்ற விரும்புகிறார்கள். விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டுப்படியாகக் கூடிய விலைகள், கொள்முதல் ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு, அவர்களை சர்வதேச உணவுச் சந்தையின் மாறுபாடுகளுக்குத் தள்ளிவிட்டிருக்கிறார்கள். இதனால் இப்போதுநம் நாட்டில் உள்ள பொது விநியோக முறை கைவிடப்படுவதற்கு இட்டுச்செல்லும், மக்களின், குறிப்பாக ஏழை மக்களின், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திடும்.விவசாயிகளில் பெரும்பகுதியினர் தங்கள் நிலங்களிலிருந்துவெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள்.

பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நாசகர தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை உறுதியுடன் நடத்திக்கொண்டிருக்கும் தொழிலாளர்வர்க்கம், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினரையும் சிஐடியு பாராட்டி வாழ்த்துகிறது.  

விவசாயிகளின் வீரஞ்செறிந்த போர்
பாஜக அரசாங்கத்தின் இத்தகைய தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதற்காக  தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவு மக்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது. ‘கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு’ எதிராக தில்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டங்கள் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடர்வதோடு மட்டுமல்லாமல், நாடு முழுதும் உள்ள அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. விவசாயிகளைப் பிளவுபடுத்தவும், தீங்கிழைக்கவும், மக்களைத் திசைதிருப்பவும் மேற்கொண்ட பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களாலும் போராட்டத்தைப் பலவீனப்படுத்தபாஜக அரசாங்கத்தினால் முடியவில்லை.  விவசாயிகள் தங்கள்ஒன்றுபட்ட போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். சிஐடியு, அவர்களுடைய தைரியத்திற்கும், உறுதிக்கும் தலைவணங்குகிறது. அவர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுதும் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து அணிதிரண்டிருக்கிறார்கள் எனக் கூறுவதில் பெருமிதம் கொள்கிறோம்.   

தொழிலாளர் வர்க்கம், பெரு முதலாளிகளும் அவர்களின் பிரதிநிதியாக ஆண்டுகொண்டிருக்கும் மோடி தலைமையின் கீழான பாஜக-வின் ஆட்சியிலும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஏவப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் உறுதியுடனும், தொடர்ந்தும் போராடிவருவதற்கு சிஐடியு தன் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் காரணங்காட்டி, சமூக முடக்கம் மற்றும் ஊரடங்கு போன்று  தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குப் பணிந்துவிடாமல், தொழிலாளர் வர்க்கம் தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டு, அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகத் தன்குரலை ஓங்கி ஒலித்திருக்கிறது. வீடுகளின் கூரைகளிலிருந்தும், பால்கனிகளிலிருந்தும் தன் குரலை எழுப்பிய தொழிலாளர் வர்க்கம், படிப்படியாக போராட்டத்தை வலுப்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதிலும் அவற்றையும் மீறி, நவம்பர் 26 அன்று ஒரு வெற்றிகரமான வேலைநிறுத்தத்தை நடத்தியது. இந்தப் போராட்டங்களை துவக்குவதில் தன்னுடைய பங்கிற்காக சிஐடியு பெருமிதம் கொள்கிறது. இப்போராட்டங்களில் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றதற்காக அவர்களை சிஐடியு வாழ்த்துகிறது, பாராட்டுகிறது. நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், உருக்கு (ஸ்டீல்) தொழிலாளர்கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள், தனியார்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள், திட்ட (ஸ்கீம்) தொழிலாளர்கள் உட்பட அனைத்துத்துறைகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிலாளர் - விவசாயிகள் ஒற்றுமை
நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்கின்ற உழைக்கும் மக்களில் பெரும் இரு பிரிவாக இருக்கக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கிடையே அதிகரித்துவரும் ஒருமைப்பாடு,  மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இத்தகைய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுப்பதற்காக சிஐடியு எப்போதும் முயற்சிகள் மேற்கொண்டு வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்கள் சொந்தக் கோரிக்கைகளுக்காகப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உணர்வுப்பூர்வமாக மற்றவர்களின் போராட்டங்களிலும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமையை வலுப்படுத்தி, அதன் மூலம் பரந்துபட்ட மக்களை ஈடுபடுத்தி,ஓர் உயர்ந்த மட்டத்திற்குப் போராட்டங்களைக் கொண்டுசெல்வது, அவர்களுக்கு நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை மட்டுமல்ல, சுரண்டும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்கிற வரலாற்றுச்சிறப்புமிக்க வாய்ப்பினையும் நல்கிடும் என்பதிலும் சிஐடியுநம்பிக்கை கொண்டிருக்கிறது.

ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகளும் சாதி வெறி சக்திகளும் மேற்கொள்ளும் பிளவுவாத நடவடிக்கைகளை முறியடித்து, தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் அனைத்துத்தரப்பினரின் ஒற்றுமையையும் வலுப்படுத்திட நாடுமுழுதும்உள்ள தொழிலாளர்களை சிஐடியு வலியுறுத்துகிறது.தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துத்தரப்பினரின் ஒற்றுமையையும் வலுப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் நலன்களையும் நாட்டையும் பாதுகாத்திடுவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்துகிறது.

அடக்குமுறை நடவடிக்கைகள்
பாஜக அரசாங்கமானது தங்கள் கொள்கைகளை எதிர்ப்பவர்களை நசுக்கிட நயவஞ்சக வழிகளில் முயற்சிகள் மேற்கொள்வதை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசமைப்புச் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகள் மற்றும் நாடாளுமன்ற நெறிமுறைகள் மீறப்படுகின்றன. பாஜக அரசாங்கம், சட்டவிரோத நடவடிக்கைகள், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற  மிகவும் அரக்கத்தனமான சட்டங்களைப் பயன்படுத்தியும், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை,மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் போன்றவற்றைப் பயன்படுத்தியும், தன் கீழ் இயங்கும் தில்லிக் காவல்துறையைப் பயன்படுத்தியும் தங்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களையும், தங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராகப்போராடுகிறவர்களையும் மிரட்டி, அச்சுறுத்தி, கைது செய்து,சிறையில் அடைத்துப் பல்வேறு விதங்களில் துன்புறுத்தும்நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெண்கள், இதழாளர்கள், தொழிற்சங்கவாதிகள், மனித உரிமை மற்றும் குடிமை உரிமைப்போராளிகள் போன்ற எண்ணற்றவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு, ஆண்டுக்கணக்காக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிணையும் மறுக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் போன்ற நிறுவனங்கள் கூட அரசின் நிலைப்பாட்டிற்கு அடிபணிந்து போவது அதிகரித்துக்கொண்டிருப்பது வருந்தத்தக்கது. தற்போது ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்டுள்ள சமீபத்தியவளர்ச்சிப் போக்குகளை ஆராயும்போது, தேர்தல் ஆணையமும் இதேபோன்று சென்றுகொண்டிருப்பதையே காட்டுகிறது.மூலதனமும் அரசாங்கத்தில் உள்ள அதன் பிரதிநிதிகளும் தொழிலாளர்கள் மற்றும் இதர உழைக்கும் மக்கள்மீது மிகவும் மிருகத்தனமாகத் தாக்குதல் தொடுப்பதுஎன்பது இந்தியாவிற்கு மட்டுமானது அல்ல. கொரோனாவைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பேயே பொருளாதார நெருக்கடி அதிகரித்திருந்த சூழ்நிலையில், உலகம் முழுதும் உள்ள ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்களைக்கசக்கிப் பிழிந்து, தங்கள் லாபத்தை அதிகப்படுத்துவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற உரிமைகளைக் கட்டுப்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள், குறிப்பாக சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுப் பேர உரிமை,ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பல முதலாளித்துவ நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆளும் வர்க்கங்கள் தங்கள் குறிக்கோளை அடைவதற்காக வலதுசாரிசக்திகளின் வளர்ச்சியை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களை மதம், இனம், பிராந்தியம் போன்று  பல்வேறுஅடிப்படைகளின்கீழ் பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.நவீன தாராளமயக் கொள்கை தோல்வியடைந்த நிலையிலும்கூட, முதலாளித்துவ அமைப்புமுறையால் இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, மக்கள் மீது சுமைகளை மேலும் மேலும் ஏற்றுவதைத் தவிர வேறெதையும் அதனால் செய்ய முடியவில்லை. இவை நெருக்கடிக்குத் தீர்வு அளிப்பதற்குப் பதிலாக அதனை மேலும் மோசமானதாகவே மாற்றியிருக்கிறது.

பாசிச நோக்கத்துடன் ஜனநாயகக் கூறுகள் அழிப்பு
முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில், ஆளும் வர்க்கம் தன் பொருளாதாரஅமைப்புமுறையையும், அரசியல் அமைப்புமுறையையும் ஒட்டுமொத்த ஆட்சி அதிகாரத்தையும் மத்தியத்துவப்படுத்திடவும், எதேச்சதிகார மானதாக மாற்றிடவும் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவை அனைத்து ஜனநாயகக் கூறுகளையும் தன்னுடைய தெளிவான பாசிச நோக்கத்துடன் அழித்துக்கொண்டிருக்கின்றன. சுகாதாரம், கல்வி, கனிம வளங்கள் உட்பட தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. நம் நாட்டின் பொருளாதாரத்தையும், சந்தைகளையும் அந்நிய ஏகபோக கார்ப்பரேட்டுகளுக்கு அகலத் திறந்துவிட்டிருக்கிறது. நம்வேளாண்மையையும் மற்றும் அதனைச் சார்ந்த அனைத்துக் கூறுகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதற்கும், அவற்றின் மூலம் அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும் வழிவகுத்துத்தந்திருக்கிறது.தொழிலாளர் (விரோத) சட்டங்கள் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளின் மீதான தாக்குதல்கள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பேச்சுரிமை, ஆளும்கட்சிக்கு எதிராகக் கருத்து கூறும் உரிமை, எதிர்க்கட்சிகள் மற்றும் போராட்டங்கள் மீதான தாக்குதல்கள், அரசமைப்புச்சட்ட ஷரத்துக்களைக் காலில் போட்டு மிதித்தல், நாடாளுமன்ற நெறிமுறைகளை ஓரங்கட்டுதல், தற்போது கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் அமைந்துள்ள மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் என அனைத்தும்இத்தகைய எதேச்சதிகாரத் திட்டத்தின் கீழ் அமைந்துள்ளபிரிக்கமுடியாத பகுதிகளேயாகும். மக்களின் ஒற்றுமையைச்சீர்குலைப்பதற்காக மதவெறி சக்திகளையும், சாதி வெறிசக்திகளையும் பயன்படுத்துதல்,  விரல்விட்டு எண்ணக்கூடியஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக மக்கள் போராட்டங்களைப் பலவீனப்படுத்துதல் ஆகியவையும் அவர்களின் இதே நோக்கத்திற்கான அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கமேயாகும்.
நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களும், உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்களும் முதலாளித்துவ அமைப்பானது தங்கள் நலன்களைப் பாதுகாத்திடாது என்பதைத்தற்போது உணர்ந்துகொள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக அரசாங்கத்தின் ‘கார்ப்பரேட்டுகளுக்கு அடி பணிந்து நடந்திடும்’ குணத்தை மக்கள் புரிந்துகொள்வது என்பதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மக்கள் புரிந்துகொள்வதை மேலும் அதிகரித்திட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின்மத்தியில் இந்த அரசாங்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை உருவாக்குவதற்கு இதுவே சரியான தருணமாகும்.  தங்களின்நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டிட உதவிட வேண்டும். அவர்களின் நண்பர்களுடன் அவர்களை அணிதிரட்டிட வேண்டும்.அவர்களின் எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடிட வேண்டும்.

வர்க்க ரீதியாக முறியடிப்போம்!
இன்றைய ஆட்சியாளர்களால் மக்கள் மீதும், பொருளாதாரத்தின் மீதும், ஜனநாயக அமைப்பு முறையின் மீதும், சமூக நல்லிணக்கத்தின் மீதும், ஒட்டுமொத்தமாக தேசஒருமைப்பாட்டின்மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் வர்க்கத்தின் இந்தத் தாக்குதல்களின் குணத்தைப் புரிந்துகொண்டு, தொழிலாளர் வர்க்கம் இதனை வர்க்கரீதியாக முறியடித்திட வேண்டும்.தொழிலாளர் வர்க்கமும் மக்களும் தங்களின் உரிமைகளையும், கண்ணியத்தையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் ஜனநாயக அமைப்பு முறையையும் அதன் மாண்புகளையும் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்தையும், நாட்டின் செல்வாதாரங்களையும் பாதுகாப்பதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காகவும் மக்களுடன் இணைந்து தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.இதற்கு, முதலாளித்துவ அமைப்புமுறையின் இயல்பானசுரண்டும் குணத்தையும், அதன் மனிதாபிமானமற்ற தன்மையையும் அதன் அரசியலையும் அம்பலப்படுத்திக் காட்டுவதை உறுதியாகவும் தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் கடமையை மேற்கொள்ள இந்த மே தினத்தில் நாம் சபதம் எடுத்துக் கொள்வோம்.

அறைகூவல்
நம் நாட்டிலும் உலகம் முழுதும் இருக்கின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் சிஐடியு கீழ்க்கண்டவாறு அறைகூவல் விடுக்கிறது: அனைத்து மக்களுக்கும் கோவிட்-19கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என்றும், அதேபோன்று அனைவருக்கும் பொது சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரி ஒன்றுபடுவோம், போராடுவோம்.  

தொழிலாளர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் கடுமையாகப் போராடிப் பெற்ற  உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும், அவர்களின் வாழ்வாதாரங்கள் மீது முதலாளித்துவத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகவும் ஒன்றுபடுவோம், போராடுவோம். மாற்றுக்கொள்கை கொண்ட, மக்கள் ஆதரவு ஆட்சி அமைந்திடஒன்றுபடுவோம், போராடுவோம்.தொழிலாளர் வர்க்கத்தையும், மக்களையும் பிளவுபடுத்திட ஆளும் வர்க்கங்கள் மேற்கொள்ளும்அனைத்து முயற்சிகளையும் முறியடித்திட, ஒன்றுபடுவோம், போராடுவோம்.

மே தினம் வாழ்க.

தொழிலாளர் வர்க்க ஒற்றுமை ஓங்குக.

தொழிலாளி-விவசாயி ஒற்றுமை ஓங்குக.

சோசலிசம் வாழ்க.

முதலாளித்துவம் வீழ்க.

தமிழில்: ச.வீரமணி

சிஐடியு மே தின அறைகூவல் கட்டுரை தொகுப்பு 4 மற்றும் 5-ஆம் பக்கம் என தொடர்ச்சி தொகுப்பாக உள்ளது... தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே கட்டுரைத் தொகுப்பில் ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.   

;